Sunday, August 28, 2005

தமிழகத்தில் இஸ்லாமியர்

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.


நன்றி : தினமணி.

17 comments:

')) said...

உங்கள் வலைப்பூ பட்டியலிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். இதுபோன்று அரிய பல தகவல்களை உங்களிடமிருந்து பெறுவதற்கு காத்திருக்கிறோம்.

')) said...

தமிழ் முஸ்லிம்கள் காலை உணவு உண்ண அழைக்கும் பொழுது பசியார வாருங்கள் என்பதாகக் கூறுவார்கள். இதுவும் தமிழ் முஸ்லிம்களின் கண்டுபிடிப்பா அல்லது வேறு யாரேனுமா? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

')) said...

//இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன//

//மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். //

பார்த்து எழுதுங்க அப்துல் குத்தூஸ். இவங்களுக்கெல்லாம் "பெட்ரோ-டாலர்" கைமாறி இருக்கும் என்று சொல்ல பலர் தயாராக இருக்கிறார்கள். :-))

')) said...

அழகப்பன், நல்லடியார் உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

அடி ஆத்தி அவர்களே, எங்களூரிலும் நாங்கள் காலை உணவை டிபன் என்றோ, பிரேக் பாஸ்ட் என்றோ கூறுவது கிடையாது பசியார எனத்தான் அழைப்போம். ஆனால், மதிய உணவை சாப்பாடு எனவும், இரவு உணவை டிபன் எனவும், சாப்பாடு எனவும் கூறுவோம். பிரேக் பாஸ்டை தமிழில் பசியார என அர்த்தம் கொள்வதாகத்தான் நான் நினைக்கின்றேன். நீண்ட நேரம் கழித்து உண்பதனால் இதற்கு பசியார, பிரேக்பாஸ்ட் என அர்த்தம் கொள்ளப்பட்டதாக நான் நினைக்கின்றேன். ஆனால், இது யாருடைய சொல்லாடல் என எனக்குத் தெரியாது.

')) said...

அய்யா!
'பசியார' இல்லை. "பசியாற" - அதாவது பசியாற்றுவது என்னும் பொருளில்.
அதே போல் தமிழ் முஸ்லிம்களிடம் 'பழையது' இல்லை. 'நீர்ச்சோறே' உண்டு.
'பாயாசம்' இல்லாமல் 'பாச்சோறு' தான் உண்டு.
சோற்றுக்கு 'ஆணம்' தான். 'குழம்பு'வதில்லை.

')) said...

ஆஹா ராஜா உங்களின் விளக்கம் அருமை. இன்னும் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் பதிவு செய்துக் கொள்வோம்.

')) said...

தமிழில் பசியாறுதல், ஆங்கிலத்தில் breakfast (உபவாசத்தை முடித்தல்), ஃபிரெஞ்சில் dejeuner (உபவாசத்தை முடித்தல்), இவை எல்லாமே ஒருவகையில் பார்த்தால் மதம் சம்பந்தப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் மதம் வகித்த பங்கு அப்படி.

நல்லப் பதிவு. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

//தமிழில் பசியாறுதல், ஆங்கிலத்தில் breakfast (உபவாசத்தை முடித்தல்), ஃபிரெஞ்சில் dejeuner (உபவாசத்தை முடித்தல்), இவை எல்லாமே ஒருவகையில் பார்த்தால் மதம் சம்பந்தப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் மதம் வகித்த பங்கு அப்படி.//

டோண்டு சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் மதம் சார்ந்து இருப்பதாக என்னால் அறிய முடியவில்லை. தெளிவு படுத்துங்கள்.

பசியாற என்பது இலங்கை வழி தமிழ் ஆக இருக்கும் என நினைக்கிறேன். இந்திய வழி தமிழில் சிற்றுண்டி என்றும் சொல்வர். Break Fast என்பது காலை உணவை மட்டும் குறிக்காது. நோன்பு திறப்பதற்கும் Breaking Fast (இஃப்தார்?) என்றே நினைக்கிறேன்.

விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு? என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

தேநீர் - தேத்தண்ணி (தேயிலைத் தண்ணீர்?) "சுலைமானி" என்றால் அரபியில் Black Tea.

')) said...

"டோண்டு சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் மதம் சார்ந்து இருப்பதாக என்னால் அறிய முடியவில்லை. தெளிவு படுத்துங்கள்."

உபவாசம் யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? உதாரணத்துக்கு இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். ஏகாதசி தினங்களில் (அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து 11-ஆம் நாள்) பட்டினியிருப்பார்கள். அதை உபவாசம் என்று கூறுவார்கள். அதே போல இரவு உணவுக்குப் பிறகு காலையில்தான் உண்ண வேண்டும் என்பதும் மதத்தால் வலியுறுத்தப்படும் விஷயமே.

ஆனால் பலர் திடீரென்று இரவு 12 மணியளவில் நினைத்துக் கொண்டு வண்டியெடுத்துக் கொண்டு ஊரில் இருக்கும் கையேந்தி பவன்களில் இருக்கும் டிபனை ஒரு பிடி பிடிக்கிறார்கள்.

அவ்வாறெல்லாம் செய்யக் கூடாது என்று மதம் கூறுகிறது. எல்லாமே நம் நல்லதுக்குத்தான். ஆனால் அக்காலத்தில் பெரியவர்கள் இதை சாமி பெயரைச் சொல்லி நிறைவேற்றினார்கள். அதைத்தான் நான் இங்கு எடுத்துரைத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

//உபவாசம் யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?//

அரசியல்வாதிங்க இருக்கும் உண்ணாவிரத்துக்கும் உபவாசத்துக்கும் ஏதாச்சும் தொடர்பு உண்டா சாமி?

')) said...

இந்தியாவிற்கு வந்த இசுலாமியர்களின் நடத்தையால் கவரப்பட்டு அவர்களோடு கலந்த இந்தியர்களால் இசுலாம் இந்தியாவுக்கு வந்தது. அதுப்போல் இந்தியாவுக்கு கிரிஸ்தவம் எப்படி வந்தது தெரியுமா?

said...

I AM FROM THIRUVITAHN CODE. "ANJUVANNAM" IS STREET NAME.

ADD THIS ALSO - "CHERAMAAN PERUMAL" - IS A ONE OF THE KING OF "TRAVANCORE SAMASTHANAM" - CAPITAL SITUATED NEAR THIRUVITHAN CODE - WHO BECOME ABDUL RAHUMAN SAAMIRI AND WENT TO MECCA AND STAYED THERE. HE LEAVE HIS EMPIRE WHEN HE GOT ISLAM.

AND "THIRUITHAN CODE" MEANS "THIRU" , "ATHAN" , "CODE-PLACE" - THE PLACE OF FIRST HEARED 'ATHAN'

')) said...

i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here

')) said...
This comment has been removed by a blog administrator.
')) said...
This comment has been removed by a blog administrator.
')) said...
This comment has been removed by a blog administrator.
')) said...

excellent work.
jazakallah khair.