Tuesday, April 04, 2006

ஒரு முஸ்லிமின் பார்வையில் ஓவியர் உசேன்

பிரபல ஓவியர் என்று சொல்லிக் கொள்ளும் எம்.எப். உசேன் என்பவர் இந்தியக் கடவுளர்களை நிர்வாணமாக்கி வரைந்து சில பேரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். இயற்கையைத் தவிர மற்றவற்றை ஓவியமாக வரைவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் இந்த வரம்புகளை அப்பட்டமாக மீறும் எம்.எப். உசேனை முஸ்லிம்கள் யாரும் ஆதரிப்பதில்லை. அப்படிச் சொல்வதை விட அவரை முற்றிலும் புறக்கணித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

உசேன் என்ற இந்தக் கிறுக்கனுக்கு எத்தனையோ அமைப்புகள் பட்டங்களை வழங்கி கவுரவித்துள்ளன. இப்படி பட்டம் கொடுத்த அமைப்புகளில் ஒரு அமைப்பு கூட இஸ்லாமிய அமைப்பு அல்ல என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அதுபோல இவர் வரைந்த ஓவியங்களை முஸ்லிம்கள் அல்லாதவர்கள் தான் ஆயிரங்களையும், லட்சங்களையும் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன்? எம்.எப். உசேனின் 'எக்ஸ்சிபிஷனு'க்கு முஸ்லிம் யாரும் செல்வதும் இல்லை. அவர் வரைந்த ஓவியங்களை கண்டு ரசிப்பதுமில்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனாலும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் எப்போதும் சீண்டிப் பார்க்கும் சங்பரிவாரம் - உசேனை ஒரு கருவியாக்கி முஸ்லிம்களை ஆத்திரமூட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியக் கடவுளர்களை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த எம்.எப். உசேனை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அஜய் சிங் நருவி என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நரேந்திர ஜெயின் உசேனுக்கு ஜாமீனில் வரக் கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை உசேன் என்ற கிறுக்கனை ஓவியம் வரையாமல் தடுக்க வேண்டும். இதை அவர் மீறினால் அதற்கான தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் உசேனை ஆதரிப்பவர்கள் கோவில்களில் இல்லாத ஒன்றை உசேன் வரையவில்லை. சிற்பமாக காட்சியளிக்கும் ஒன்றை ஓவியமாக வரைவதை ஜனநாயகத்தில் தடுக்க முடியாதே! என்கிறார்கள். இவர்களுக்கு தக்க பதிலளிப்பது யாரோ?

நன்றி: உணர்வு வார இதழ்.

நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?

"ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்து விட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்."

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல்மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.

நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

"யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்.

இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். "இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்" என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேரிலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

கனவில் கண்டால் நேரிலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.

நன்றி: ஏ1ரியலிசம்.காம்