Wednesday, July 06, 2005

இரண்டு நிலைகளில் இழுபடும் இன்றைய மங்கைகள்

ஆக்கம் : டாக்டர். ஜீனத் கவுஸர்

இது போட்டிகளின் யுகம்.


மனித வாழ்வே போட்டியாகி, மனித குலமே போட்டியிலும், மற்றவரை முந்தி விடும் முயற்சியிலும் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இது...!


வேகமும் அவசரமும், ஆசையும், ஏக்கமும் நிரம்பிய இந்தப் போட்டியில் ஒருவர் என்ன தான் சம்பாதித்தாலும், எதனை தான் ஈட்டினாலும் கிஞ்சிற்றும் மன நிறைவு பெறாத முரண்பாடுகளும் நிரம்பிய காலம் இது...!


ஒருவர் என்னதான் வாழ்வில் முன்னேறினாலும், அந்த வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அற்பமானதாக ஒதுக்கிவிட்டு ''இன்னும்... இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்'' என்கிற போராட்டத்தில் மூழ்கிவிடுகிறான். மொத்தத்தில் இன்றைய மனிதன் பணம் பண்ணும் எந்திரமாக சுருங்கிவிட்டான்.


இந்த நவீன வாழ்க்கைப் போராட்டத்தில் - இந்தப் போட்டியில் - ஆண்களுடன் பெண்களும் சேர்ந்துவிட்டிருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்தப் போட்டியில் ஆண்களையும் முந்திவிட வேண்டும் என்கிற வெறி கொண்டவர்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.


இத்தகைய பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது, கவலையளிக்கின்றது. ஏனெனில் ஆண்கள் எதிர்கொண்டுள்ள வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஒரே ஒரு திசைதான் உண்டு. ஆனால் பெண்களின் போராட்டமோ இரண்டு திசைகளைக் கொண்டது. இரண்டு திசை எப்படி என்கிறீர்களா...?


வேலைக்குப் போகும் இன்றைய மங்கைகளின் நிலைமை என்ன?

முதலாவதாக அவர்கள் தம்முடைய தொழில், வணிகம், பணி அல்லது பணம் சம்பாதிப்பதற்காக ஆண்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அந்தப் போட்டியில் நேரடியாகப் பங்கேற்று அதன் நெருக்கடிகள், சவால்கள் பேன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களாக, அதன் விளைவாக ஏற்படுகின்ற மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும் சமாளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.


மறுபக்கம், அவர்கள் மீது அவர்களைப் படைத்த இறைவன் சுமத்திய பொறுப்புகளை, அவர்களின் இயல்பிலேயே பதிந்து விட்ட பொறுப்புகளையும் அவர்கள் செய்தே ஆக வேண்டும், அவற்றைத் துறந்து விடவும் அவர்களால் முடியாது. இவ்வாறாக குழந்தைப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகப் பொறுப்பு ஆகிய இந்த இயல்பான பணிகளும், பொறுப்புகளும் வேலைக்குப் போகும் பெண்களுக்குக் கூடுதல் சுமையாக ஆகி விடுகின்றன. இந்த கூடுதல் சுமை தற்போதைய சமூகங்களில் பெண்ணின் முதுகெலும்பை முறித்து விட்டுள்ளது. சுமூகத்திலும் சரி, குடும்பத்திலும் சரி ஒரு உள் நெருக்கடியும், மோதலும் என்றென்றும் நிலை பெற்று விட்டது.


இவ்வாறு வேலை, குடும்பம் என இரண்டு திசைகளிலும் இழுபடுகிற அவலத்துக்கு ஆளாகி நிற்கிறார்கள், இன்றைய மங்கைகள்.

இதன் இரண்டாவது வருந்தத்தக்க அம்சம் என்னவெனில் இவையெல்லாமே 'ஆணும் பெண்ணும் சமம்' என்கிற மனதை மயக்கும் கோஷத்தின் அடிப்படையிலும் சமத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றின் பெயரிலும் செய்யப்படுவதுதான். பெண்களே இந்தப் பிரச்சாரத்துக்கு இரையாகி இருப்பதும் வேதனை தருகிறது.

இவ்வாறாக பெண்களே இரட்டை பெறுப்புகளை வலிந்து எடுத்துக் கொண்டு புதுப்புது பிரச்சனைகளைத் தாமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இதன் விளைவாக எழக்கூடிய பிரச்சனைகளும் பல்வேறு விதமானவை: பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துபவை: சமூகத்திலும், குடும்பத்திலும் எல்லா விதங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துபவை.


இவற்றால் மிக அதிகமான பாதிப்புக்குள்ளாவது குடும்பமும், வீடும்தான். குழந்தை பராமரிப்பு, வளர்ப்பு ஆகிய பணிகளை எந்த நிலையிலும் பெற்றோர்கள்தான் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வீட்டுப் பெண் வேலைக்குச் சென்று விடுவதால் இந்த முக்கியமான பொறுப்பு தவறான கைகளுக்குச் சென்று விட்டுள்ளது. இந்த நிலைமையில் நல்ல மனிதர்கள், மாண்பும், மதிப்பும் வாய்ந்த தலைமுறையினர் தயாராவார்கள் என எதிர்பார்ப்பதும் வீண் தான். இவ்வாறாக அன்னையின் அன்பும், தந்தையின் ஆதவும் கிடைக்கப் பெறாத புதிய தலைமுறைகள் சமூகத்துக்கும், நாட்டுக்கும் பெரும் பிரச்சனையாகி விடுகிறார்கள்.


இவற்றால் பெண்ணுக்கு ஏற்படுகிற, ஏற்பட்ட இன்னொரு முக்கியமான பாதிப்பையும் சொல்லித் தான் ஆக வேண்டும். அது, பெண்ணின் உடல் நலம் மீது இந்த இரட்டை பொறுப்புகளால் ஏற்படுகிற பாதிப்புகளே...! வேலைக்குப் போகும் இன்றைய பெண்கள் புதிய புதிய நோய்களுக்கும் உளவியல் பிரச்சனைகளுக்கும் ஆளாகி தவிக்கிறார்கள். மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் என நவீன வாழ்க்கை முறையால் உருவான நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.


அலுவலகப் பணிகளின் பளு, நாள் முழுக்க உழைத்த களைப்பு, இவற்றோடு வீட்டு வேலை, சமையற் வேலை, குழந்தை வளர்ப்பு போன்ற கூடுதல் சுமைகள் - இவையெல்லாமே சேர்ந்து உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிக அதிகமான அழுத்தத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி நிற்கிறாள், இன்றைய மங்கை...! மன இறுக்கம், டிப்ரஷன், மன உளைச்சல், மிகை இரத்த அழுத்தம், இதய நோய் என பற்பல நோய்கள் இன்று பெண்களை அதிகமாகப் பாதித்து வருகின்றன.


இறையச்சம் குறித்துப் பேசுவதும், ஒழுக்க நெறிகள் குறித்து அளவளாவுவதும் கூட பிற்போக்குதனமானது என எண்ணப்படுகிற அலுவலக, தொழிற்சாலை, பணியிடச் சூழல்களில் பெண் ஒரு விந்தையான, மனதை நோகடிக்கிற நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள். கேலி கிண்டல்களையும், தவறான கள்ளப் பார்வைகளையும், சீண்டல்களையும், ஆபாச ஜாடைமாடையான பேச்சுகளையும், நாள்தோறும் நாலு காசுக்காக சகித்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம்...! பாலியல் முறைகேடுகளுக்கும் ஆளாகிற செய்திகளும் அச்சு, மின்னணு ஊடகங்களில் அதிகமாக வெளிவரத்தான் செய்கின்றன.


 இவர்களின் துரதிருஷ்டம் அத்துடன் நிற்கிறதா? நாள் முழுவதும் அல்லல்பட்டு, அவதியுற்று களைத்துத் திரும்பும் பெண்ணுக்கு ஆதரவான, நிம்மதி தருவதாக குடும்பச்சூழல் அமைவதில்லை. மோதல், நெருக்கடி, பதற்றத்துக்குரிய இடமாக வீடு காட்சியளிக்கும். பரஸ்பர ஒத்துழைப்பு, நம்பிக்கை, பொறுமை, ஆதரவு ஆகியவற்றுக்குப் பதிலாக சுயநலம், உலக நலம், பரஸ்பர சந்தேகம், எரிச்சல் நிரம்பிய குடும்ப சூழலில் மூச்சு விடவும் திணறுகிற இன்றைய மங்கைகள்...!


இந்தப் பிரச்சனைகளையும், நெருக்கடிகளையும் மௌனமாகச் சகித்துக்கொண்டு கூடுதல் வருமானத்தை ஈட்டுகிற செல்வம் சம்பாதிக்கிற, ஆண்களோடு தோளேடு தோள் நிற்கிற 'கடமையை' ஆற்றிக் கொண்டிருப்பவள்தான் இன்றைய மங்கை...! இந்தச் சூழலில் தனி நபருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்துவதுடன் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பெரிதும் தீங்கிழைக்கும் கேடாக அமையும்.


தனி நபர், சமூகம் என எவருக்கும் பயன் தராத, சிரமத்தையும் இழப்பையும் மட்டுமே ஏற்படுத்துகிற இந்த இக்கட்டான சமூகச் சூழலை ஏற்படுத்திpய முழு பொறுப்பும் பெண்ணிய இயக்கவாதிகளையே சாரும். இந்தப் பெண்ணியவாதிகள் சற்றொப்ப இரண்டு நூற்றாண்டுகளாக மனித குலத்தையே சீரழித்து வருகின்றார்கள்.


பெண்ணிய கோட்பாடுகள்:


எல்லாமே ஐரோப்பிய மறுமலர்ச்சியிலிருந்து தான் தொடங்கியது. மார்க்ஸிஸம், சோஷியலிஸம், தீவிரவாதம், பின் நவீனத்துவம் என சித்தாந்த வானில் உதித்த தத்துவங்களின் பட்டியல் நீளும்.


அடிப்படையான உண்மை ஒன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்குரிய கல்வியுரிமை, சொத்துரிமை, வாக்குரிமை என எல்லா உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சமூகங்களில்தான் இந்தப் பெண்ணிய சித்தாந்தங்கள் ஆண்களும், பெண்களும் சமம், சம உரிமை வேண்டும் போன்ற கூப்பாடுகளுடன் தொடங்கி வேர் பிடித்தன.


இந்தப் பின்னணியில்தான் அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த கல்வித்திட்டத்தை - பெண் கல்வியை முற்றாக ஒதுக்கி விட்ட கல்வித் திட்டத்தை கேத்தரின் மெகாலே (1731-1791) ஒரேயடியாக நிராகரித்து விட்டதைப் பார்க்க வேண்டும். புகழ்பெற்ற தத்துவஞானி ரூஸோ கூட சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் தனித்தனியான பாடத்திட்டத்தை வகுத்திருந்தார்.


ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரச்சனை தீவிரமாக முற்றவிட்டது. கலவரம் வெடிக்குமோ எனப் பயப்படுகிற அளவுக்கு சமூகச் சூழல் முற்றி விட்டிருந்தது. இந்தச் சமயத்தில் தான் பேடே ஃபிராய்ட்மேன் என்கிற அமெரிக்கப் பெண்மணி பெண்ணியம் குறித்து புதிய சிந்தனையை முன் வைத்தார். இந்தப் பெண்மணிதான் 'நவீன பெண்ணிய இயக்கங்களின் தாய்' என மதிக்கப்படுகிறவர். குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் ஆகிய பணிகளில் பெண்களை முடக்கி வைப்பதை பெண்கள் மீதான மோசடியாக பேடே பிராய்ட்மேன் வர்ணித்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், சமூக, பொது செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.


பேடேயின் குரலுக்குச் செவி சாய்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள முயன்றனர். ஆனால் பொழுது சாய்ந்த பிறகு அவர்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பும் போது வீட்டு வேலைகள் காத்திருக்கும்.


இவ்வாறு வெளியிலும் வேலை, வீட்டிலும் வேலை என இரட்டைச் சுமைகள் முதலில் சுகமான சுமைகளாகத் தெரிந்தன. காலப்போக்கில் இது பற்றிய நிஜங்கள் சுட்ட போது பெண்ணிய சிந்தனையாளர்களே தங்களைத் திருத்திக் கொண்டனர்.

பேடே


பிராய்டுமேனே இரண்டாவது நிலை
Second Stage
 என்கிற பெயரில் தாம் எழுதிய நூலில் இந்த இரட்டைச் சுமை பற்றி குறைபட்டு புலம்பிய பிறகு இதற்கு தீர்வு ஒன்றையும் சொன்னார். பெண்கள் சமூகத்திலும் பங்காற்ற வேண்டியதுதான்: கூடவே வீட்டுப் பணிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனப் பெண்களைக் கேட்டுக் கொண்ட அவர் ஆண்களுக்கும், பெண்களுக்கு ஒத்துழைப்புத் தருமாறும், பரஸ்பர ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பெண்களால் வீட்டுக்கு வெளியிலும் தீர்க்கமான பங்காற்ற முடியும் என தெளிவுப்படுத்தினார்.


19ஆம் நூற்றாண்டின் ஒரு சோஷியலிஸ தத்துவ அறிஞர் குல்மேன் இன்னும் பல படிகள் மேலே போய் திருமணத்தையே ஒரு பொய்யான பிணைப்பு என்று அறிவித்து விட்டார். இன்னொரு தீவிர பெண்ணியவாதியோ 'செக்ஸ் இஸ் பொலிடிக்கல்' பாலுணர்வும் அரசியல் ரீதியானது தான் என்றுரைத்து புனிதமான உறவுகளைக் கிழித்தெறிந்தார். இதன் பிறகு நிர்வாணத் தத்துவங்களின் தங்கு தடையற்ற தொடர் தொடங்கி விட்டது.


இது எந்தளவுக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதெனில் சைமன் (இறப்பு: 1986) என்கிற பெண்ணியவாதி, மனைவியாக இருப்பதை விட விபச்சாரியாக இருப்பதே சிறப்பானது. விபச்சாரிக்கு புகழும் செல்வமும் இரண்டும் ஒரு சேர கிடைத்து விடுகிறது. மனைவியோ அடிமையாகவே இருந்து விடுகிறாள் என்று சொல்லிவிட்டார். இறைவன் மன்னிப்பானாக!


இந்த கழிசடை சிந்தனைகள், சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் மேற்கத்திய சமூகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய உலகையும் இத்தகைய சுதந்திர சிந்தனைகள் எந்தளவுக்கு உள்ளீடு அற்றவை, சத்தும் சாரமும் இல்லாதவை: ஒழுக்க வீழ்ச்சிக்கு வித்திடுபவை என்பதை அறிவுத்திறன் மிக்க எவரும் எளிதில் புரிந்து கொள்வர். இந்த சித்தாந்தங்களின் தோல்வியும், இவை விளைவித்த சீர்கேடுகளையும், அழிவுகளையும் ஒட்டுமொத்த மேற்கத்திய சமூகத்திலும் எடுப்பாகப் பார்க்க முடியும். இப்போது இந்த மேற்கத்திய உலகின் தானைத் தலைவனாக இருக்கும் அமெரிக்காவும் இந்தச் சித்தாந்தங்களால் விளைந்துள்ள பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.


நீதிமிக்க அணுகுமுறை:


ஆணா, பெண்ணா என்று பார்த்து விடுவது என்பதாகவும், ஆணுக்கு நிகராக பெண் என்கிற வகையில் பால் அடிப்படையிலான மோதல்கள், உரிமைப் போர்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியமைக்க முடியாது. அதற்குப் பதிலாக பரஸ்பர ஒத்துழைப்பு, உதவி, இணக்கமான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் தான் ஆரோக்கியமான சமூகம் கட்டமைக்கப்படும்.


பெண்ணுக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தையும், உரிமைகளையும் எவரும் பறிக்க முடியாது. பெண்ணின் சமூக பங்களிப்புகளின் முக்கியத்துவத்தையும், தேவையையும் கூட எவரும் மறுக்க முடியாது. இறைவனின் தூதரும், இறைவேதமும் சமூகத்தில் பெண்ணுக்கு இருக்கிற பங்கு குறித்து சுட்டிகாட்டியுள்ளனர். இறைநம்பிக்கையுள்ள ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரின் நண்பர்களே என்றுரைத்து ஒரு நம்பிக்கை மிகுந்த சூழலை உருவாக்குவதற்கான தீர்வையும், வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.


பெண்கள் தங்களின் சமூகப் பணிகளை பாங்குடன் நிறைவேற்றுவதற்கு ஆண்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பது பிரச்சனைகளின் ஆணி வேர் கிடையாது. குடும்ப, வீட்டுப் பொறுப்புகளை முற்றாக கைக் கழுவி விடுகிற, அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதை அடிமைத்தனமாக வர்ணிக்கிற குறுகிய சிந்தனைதான் பிரச்சனைகளின் ஆணிவேர் ஆகும். இத்தகைய குறுகிய மனோபாவத்தின் விளைவாக தான் இன்று ஒட்டு மொத்த மேற்கத்திய கமூகமும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து திணறிக் கொண்டிருக்கிறது.


இது தொடர்பான இஸ்லாமிய சிந்தனைகள் மிகவும் தெளிவானவையாகவும், வெளிப்படையானவையாகவும், நடைமுறைபடுத்தப்படத்தக்கவையாகவும் இருக்கின்றன. ஆண்களையும், பெண்களையும் ஒருவர் மற்றவரின் உதவியாளராகவும், ஒத்துழைப்பாளர்களாகவும் தான் இஸ்லாம் பார்க்கிறது. ''எல்லாருமே பொறுப்பாளர்களே! பொறுப்புகள் குறித்து மறுமை நாளில் எல்லாரிடமும் கணக்கு கேட்கப்படும்'' என்கிற உயர்வான சிந்தனையை இஸ்லாம் முன் வைக்கிறது. கணவனின் வீடு மற்றும் குழந்தைகளுக்கு மனைவி தான் பொறுப்பு என்றுரைக்கிறது, இஸ்லாம்.


இதன் மூலம் திருமண உறவுகளை அடிமைத்தனமாகக் கருதுகிற மேற்கத்திய சிந்தனைகளுக்கு சவுக்கடி கொடுக்கிறது இஸ்லாம்.


திருமண உறவுகளை புனிதமான உறவுகள் எனச் சொல்வதோடு இஸ்லாம் நின்று விடவில்லை. மனைவியின் சமூக, பொருளாதார மற்றும் எல்லாத் தேவைகளயும் நிறைவேற்றும் கடமையும், பொறுப்பும் கணவனுக்கு உண்டு என இஸ்லாம் அறிவிக்கிறது. இவ்வாறாக பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பெரும் சுமையிலிருந்து பெண்களை விடுவிக்கிறது, இஸ்லாம். அலுவலக பணி, வீட்டுப் பணி என இரட்டைச்சுமைகளால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் இன்றைய மங்கைகளை வாட்டுகிற களைப்பிலிருந்தும் அவர்களை விடுவிக்கிறது, இஸ்லாம். இது இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கி இருக்கிற மிகப் பெரும் அருட் கொடையாகும்.


இஸ்லாமியக் கருத்தோட்டம்.


இங்கு இன்னொன்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இறைநம்பிக்கையுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி அவர்கள் வீட்டிலும், வெளியிலும் செய்கின்ற எல்லாப் பணியையும், உழைப்பையும் இறை உவப்பை பெறுவதற்காகவே செய்கிறோம் என்கிற எண்ணத்தாலேயே உத்வேகமும், ஊக்கமும் பெறுகிறார்கள். நம்பிக்கையாளர்களின் எந்தவொரு பணியையும் வீணானவை என்றோ, அந்தஸ்தில்லாதவை என்றோ சொல்ல முடியாது. அவை முழுக்க முழுக்க இறைவணக்கங்களே. இன்னும் சொல்லப் போனால் குடும்பத்தாரின் இரு வேளைச் சோற்றுக்காக ஒருவர் பாடுபடுகிறாரெனில் அது கூட இறைவணக்கமே. இந்த அடிப்படையில் இறைநம்பிக்கை மிக்க ஆண்களும், பெண்களும் வீட்டிலும், வெளியிலும் செய்கின்ற எல்லாச் செயல்களுமே வணக்கங்களாகத் தான் கருத்தில் கொள்ளப்படும்.

ஒரே ஒரு நிபந்தனை, அந்தச் செயல்கள் அனைத்தும் இறைவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டவையாக, இறைவனின் உவப்பைப் பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

நபித்தோழியர்கள் தத்தமது கணவர்களுடன் பேரீச்சம் பழத் தோட்டங்களில் வேலை செய்து வந்ததையும், போர்க்களத்தில் இறைப்போராளிகளுடன் தோளோடு தோளாக நின்று போரிடுகிற காட்சிகளையும் சரித்திரப் பக்கங்களில் பார்க்க முடிகிறது என்றால் அதற்குக் காரணமும் அதுதான். அந்த நபித்தோழியர்கள் அழைப்புக் களத்தில் தேர்ந்த அழைப்பாளர்களாகவும், கல்வி, அறிவுக் களத்தில் சிறந்த பிக்ஹீ வல்லுனர்களாகவும், மருத்துவர்களாகவும் இருந்தனர்.


 


நன்றி :
தமிழ் முஸ்லிம் டாட் காம்.

3 comments:

said...

It reflects your male chauvanist mentality only.

')) said...

டாக்டர். ஜீனத் கவுஸர் ங்கற வங்க பொண்ணுதாங்கோ!!!

said...

yoo... interesting :))