Tuesday, June 14, 2005

இஸ்லாம்

இஸ்லாம் என்பது மொழிக் கருத்தில் கீழ்படிதல், அமைதி, ஒப்படைத்தல், அடிபணிதல் என பலப் பதங்களில் அழைக்கப்படுகிறது. செயல் விளக்கத்தில் படைப்பினங்களுக்கெல்லாம் அதிபதியும், வணக்க வழிபாட்டிற்கு தகுதியும் வாய்ந்த அந்த ஒர் இறைவனை (அல்லாஹ்), அவனுக்கு எந்த ஒரு இணையும் கற்பிக்காமல் அதன் தூய்மையான எண்ணத்துடன் அவன் காட்டிய வழியில் வழிபட்டு அவனிட்ட கட்டளைகளைச் சரியாக பின்பற்றி, அல்லாஹ்வின் தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளும் முறைக்கு இஸ்லாம் எனப்படும். இஸ்லாத்தைப் பின்பற்றக் கூடியவர்களுக்கு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் முஸ்லிம் என பெயரிட்டு அழைத்தார்கள்.

இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டில், அரபு நாட்டில் வாழ்ந்த முஹம்மது(ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. அந்த இஸ்லாம் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இறுதியாகத் தரப்பட்ட மார்க்கமாகும். இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டது மனிதர்களால் அல்ல, அது அல்லாஹ்வால் வைக்கப்பட்ட சிறப்பு பெயராகும்.

அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்டவாறு கூறுகின்றான் :

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்¢ மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்¢ இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன் (அல் குர்ஆன் 5:3)

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல் குர்ஆன் 3:19)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்¢ ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்¢ நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (அல் குர்ஆன் 2:208)
இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்¢ அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது)¢ இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். (அல் குர்ஆன் 22:78)

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு நாள் நாங்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தோம், அப்பொழுது ஒரு மனிதர் மிகத் தூய்மையான வெண்மை நிறம் கொண்ட ஆடை அணிந்தவராகவும், கருமை நிறம்கொண்ட தலை முடியைக் கொண்டவராகவும் எங்கள் முன் தோன்றினார். அவர் ஒரு பயணியைப் போன்றும் தோற்றமளிக்கவில்லை. இருந்த போதிலும், எங்களில் அவரை எவரும் புரிந்து கொள்ள இயலவில்லை. வந்த அந்த மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி உட்காந்தார். அவரது இரண்டு முழங்கால்களும் முஹம்மது (ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தன, மேலும், அவரது இரண்டு கைகளையும் முஹம்மது (ஸல்) அவர்களின் தொடையின் மேல் வைத்துக் கொண்டு இவ்வாறு கேட்டார். முஹம்மது அவர்களே! இஸ்லாம் என்றால் என்ன? என்று சொல்லுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்றால் : அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேரொருவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவதாகும். அத்துடன் தொழுகையை நிலை நாட்டுவதும், ஜக்காத்தை கொடுத்து வருவதும், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சக்தி பெற்றிருப்பின் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதாதுமாகும் என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிமில் பதிவாகியுள்ள நீண்ட ஒரு ஹதீஸின் ஒரு பகுதியாகும்).

இவ்வாறு மேற் கூறியவைகள் தான் இஸ்லாம் எனப்படும். இந்த இஸ்லாம் நம்பிக்கையை மிகப் பிரதானமான அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை மிகச் சரியாக பற்றிப் பிடிப்பவர்களே இஸ்லாமியர்கள் ஆவார்கள்.

0 comments: